பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 8 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் காணொலி மூலம் உரையாற்றுகிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் செல்கிறார். சிம்லாவில் நடைபெறும் ஏழை மக்கள் நலன் காக்கும் கரீப் கல்யான் திட்ட மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
தொடர்ந்து, அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் உள்ளடக்கிய 16 திட்டங்கள் குறித்து பயனாளிகளுடன் காணொலி மூலம் பிரதமர் கலந்துரையாடுகிறார். மத்திய அரசின் திட்டங்கள் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளதா என ஆராய இந்த கலந்துரையாடல் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 கோடிக்கும் மேலான விவசாய குடும்பங்கள் பயன்பெறும் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 11வது தவணையை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விழாக்களில் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை பொது மக்களிடம் இருந்து பெறும் முயற்சியாக அவர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.
தொடர்ந்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். இதுதவிர அனைத்து மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரை நிகழ்த்துகிறார்.