தஞ்சாவூர்ப் பொம்மைகள் உள்ளூர்ப் பண்பாட்டைக் காட்டும் வகையில் உள்ளதாகவும், அவற்றைத் தயாரிக்கும் சுய உதவிக் குழுக்கள் மகளிருக்கு அதிகாரமளித்து அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நூறு கோடி டாலருக்கும் அதிகமான முதலீட்டில் தொடங்கியுள்ள புதிய நிறுவனங்களின் எண்ணிக்கை நூற்றைத் தாண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வெற்றிகரமான தொழில்முனைவராக விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு ஊரகப் பகுதியில் தொழில் தொடங்கி, அங்கிருந்துகொண்டே இளைஞர்களைத் தொழில்முனைவோர் ஆகும்படி ஊக்குவிப்பதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
தஞ்சாவூர் சுய உதவிக்குழு பரிசளித்த பொம்மை கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உள்ளதாகக் கூறிய மோடி, உள்ளூர்ப் பண்பாட்டைக் காட்டும் வகையிலான பொம்மையைச் செய்து பரிசளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
ஜூன் ஐந்தாம் நாள் உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுவதை நினைவுகூர்ந்த பிரதமர், ஆன்மீகத் தலங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டு அடுத்தவர்களையும் மரம் நட ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஜூன் 21ஆம் நாள் உலக யோகாசன நாள் வருவதைக் குறிப்பிட்ட அவர், யோகா மூலம் உடல், ஆன்மீகம், அறிவுசார் நல்வாழ்வு ஊக்கம் பெறுவதை மக்கள் அனுபவித்து வருவதாகத் தெரிவித்தார்.
கடுங்கோடைக் காலத்தில் நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள உயிர்களையும் காத்துக் கொள்ள வேண்டும் என்றும், பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவும் நீரும் அளித்து மனிதநேயக் கடமையைச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.