​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
8 வது பிளாட்பாரத்தில் ஏழரையான எக்ஸ்லேட்டர்.. ஏறிய இடத்தில் இறக்கி விட்டது.!

Published : May 29, 2022 1:32 PM



8 வது பிளாட்பாரத்தில் ஏழரையான எக்ஸ்லேட்டர்.. ஏறிய இடத்தில் இறக்கி விட்டது.!

May 29, 2022 1:32 PM

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இயங்காமல் நின்ற எக்ஸ்கிலேட்டர் வழியாக ஒருவர் மேலே ஏற முயல திடீரென அந்த எக்ஸ்கிலேட்டர் கீழ் நோக்கி இயங்க ஆரம்பித்ததால் ஏறிய நபர் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் ஏறிக் கொண்டிருந்த வினோதம் அரங்கேறியது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிக அளவில் லக்கேட்ஜ்களை எடுத்துச் செல்லும் பயணிகள் எளிதாக பிளாட்பாரங்களை கடந்து செல்வதற்கு வசதியாக 1 வது நடைமேடை நுழைவாயில் தொடங்கி 10 வது நடை மேடை வரை மேலே ஏறுவதற்கும், கீழே இறங்குவதற்கும் எக்ஸ்கிலேட்டர் என்று சொல்லக்கூடிய நகரும் மின் ஏணிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் 8 வது நடை மேடையில் பயணிகள் கீழ் நோக்கி இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்படுள்ள நகரும் மின் ஏணி, ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி 20 நிமிடம் வரை இயங்காமல் பழுதானது போல நின்றது. இதனால் பயணிகள் அந்த மின் ஏணியை படிக்கட்டுக்கள் போல ஏறி இறங்க பயன்படுத்தி வந்தனர் .

8 வது பிளாட்பாரத்தில் நின்று இருந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் உறவினர்களை வழியனுப்ப வந்தவர்கள் இயங்காத நகரும் மின் ஏணி வழியாக மேலே ஏறிச் சென்றனர். இதனை பார்த்த வேட்டி கட்டிய ஒருவரும் கையில் ஹெல்மெட்டுடன் அதில் ஏறி ஒவ்வொரு படியாக மேல் நோக்கி நடக்க தொடங்கினார், அவரது போதாத காலம் சிறிது நேரத்திலேயே அந்த மின் ஏணி கீழ் நோக்கி நகர ஆரம்பித்தது.

வேட்டியார் மேல் நோக்கி அடியெடுத்து வைக்க, மின் ஏணி கீழ் நோக்கி நகர ஒன்றுக்கொன்று சளைச்சதில்ல என்பது போல இருந்தது. நிதானமாக ஏறிக் கொண்டிருந்த அவரோ டிரட்மில்லில் நடப்பது போல ஒரே இடத்தில் நடந்து கொண்டிருந்தார்.

இருந்தாலும் நம்பிக்கையை கைவிடாமல் அவரும் மேலே ஏறிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ஆர்ப்பரித்து வரும் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்ட எறும்பின் கதையானது அவரது மேல் ஏறும் படலம்..!

நீண்ட நேரமாக ஏறியும் ஒரு அடி கூட மேலே செல்ல இயலாத நிலை ஏற்பட்டது

இதற்கிடையே மேலே இருந்து ஒருவர் அந்த படிக்கட்டில் அமர்ந்த படி கீழ் நோக்கி வர, வேட்டி கட்டிய நபர் தனது முயற்சியை கைவிட்டு அப்படியே நின்று விட ,
அடுத்த சில நொடிகளில் புறமுதுகு காட்டியபடி கீழ் நோக்கி இழுத்து வரப்பட்டார்.

இங்க ஒன்னும் சரியில்லை என்று அங்கலாயித்த படியே நகரும் மின் ஏணியில் இருந்து இறங்கிய அவர், தலையை சுற்றி மூக்கை தொடுவது போல சுற்றிச் சென்று சாய்தளத்தின் வழியாக மேல் ஏறி ரெயில் நிலைய பிளாட்பாரத்தை கடந்து சென்றார்.

ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள நகரும் மின் ஏணிகள் அனைத்தும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப தானாக இயங்கும் வகையில் சென்சாருடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு