பாஜகவின் எட்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஏழைகளின் நலனுக்காக வீடுகள், கழிப்பறைகள், இலவச எரிவாயு இணைப்பு, மின்னிணைப்பு, குடிநீர்க் குழாய் ஆகிய வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட்டுக்கு வந்த பிரதமரைக் கும்ப மரியாதையுடன் பெண்கள் வரவேற்றனர். தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசின் முயற்சியுடன் மக்களின் முயற்சியும் சேரும்போது தொண்டு செய்வதற்கான வலிமை அதிகரிப்பதாகவும், அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
காந்தி, பட்டேல் ஆகியோரின் கனவை நனவாக்கும் வகையில் இந்தியாவைக் கட்டமைக்க நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டதாக கூறினார். ஏழைகளின் நலனுக்காக 3 கோடிக்கு மேற்பட்ட வீடுகளையும், பத்துக் கோடிக்கு மேற்பட்ட கழிப்பறைகளையும் கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
9 கோடிப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பும், இரண்டரைக் கோடி ஏழைக் குடும்பங்களுக்கு மின்னிணைப்பும், 6 கோடிக் குடும்பங்களுக்குக் குழாயில் குடிநீரும் வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டார்.