மணிரத்னத்துக்கு தோசை ஊட்டிய மும்பை தாதா..! 35 ஆண்டுகளுக்கு பின் ஒப்புதல்..!
Published : May 28, 2022 12:24 PM
மணிரத்னத்துக்கு தோசை ஊட்டிய மும்பை தாதா..! 35 ஆண்டுகளுக்கு பின் ஒப்புதல்..!
May 28, 2022 12:24 PM
கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படத்தை எடுப்பதற்கு முன்பாக, சென்னை சாந்தோமில் வீடு ஒன்றின் அண்டர்கிரவுண்டில் பதுங்கி இருந்த மும்பை தாதாவை நேரில் சந்தித்துப் பேசியதாக மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒப்புக் கொண்டுள்ளார்.
நாயகன்.... கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்றும் சினிமா ரசிகர்களால் முக்கியமான படமாக கொண்டாடப்படுகிறது. கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் மணிரத்னம் முதல்முறையாக இந்த படம் குறித்து மனம் திறந்து பேசினார்.
மும்பையில் தங்கி 2 ஆண்டுகள் படித்து வந்த காலகட்டத்தில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்களால் காப்பாளராக, கடவுளுக்கு நிகராக போற்றப்பட்ட வரதராஜ முதலியார் குறித்து அறிந்து வைத்திருந்ததாகவும், தான் இயக்குனரான பின்னர் கமல் ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன், வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை படமாக்க முடிவு செய்ததாக கூறி உள்ளார் மணிரத்னம்.
நாயகன் படம் மும்பை தாதா வரதராஜ முதலியாரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியும் என்றாலும் படத்தை துவக்குவதற்கு முன்பாக, நண்பர் ஒருவர் மூலம் வரதராஜ முதலியாரை நேரில் சந்தித்ததை விவரித்த மணிரத்னம், சென்னை சாந்தோம் பகுதியில் ஒரு வீட்டின் அண்டர்கிரவுண்டில் பதுங்கி இருந்த வரதராஜ முதலியாரை சந்தித்து உங்கள் வாழ்க்கையை படமாக்க விரும்புவதாகக் கூறியதும், அவர் முழுமையான ஆளுமையோடு பேசியதை நினைவு கூர்ந்தார்.
இப்படித்தான் இந்தி இயக்குநர் ஒருவர் வந்து அனுமதி கேட்டார், படத்தில் தன்னை வில்லனாக தான் காட்டி இருந்தார், சினிமாகாரங்க எப்போதுமே எங்களை வில்லனாகவும் , கெட்டவனாகவும் தான் காட்டுறீங்க என்று ஆதங்கப்பட்டவாறே, என்ன சாப்பிடுறீங்க என்று வினவிய வரதராஜ முதலியார், உடனடியாக அங்கு தோசையை வரவைத்து தன்னை சாப்பிடச் சொன்னதாகவும், தான் தோசை சாப்பிடுவதை தவிர்க்க முயல அவரே தோசையை பிய்த்து சட்னியில் தொட்டு வற்புறுத்தி வாயில் ஊட்டிவிட்டதால் தனக்கு பதற்றமாகிவிட்டதாக மணிரத்னம் கூறி உள்ளார்.
சட்டத்தின் அனைத்து நுணுக்கங்களையும் தெளிவாக அறிந்து வைத்திருந்த வரதராஜ முதலியார், சென்னையில் பதுங்கி இருப்பது போலீசுக்கு பயந்து அல்ல என்றும், தான் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டால் கூட்டத்தை பயன்படுத்தி தன்னை எளிதாக கொலை செய்து விடுவார்கள் என்பதற்காகவே தான் இங்கு பதுங்கி வாழ்வதாக வரதராஜ முதலியார் தெரிவித்ததாக கூறிய மணிரத்னம் , இதனை வைத்தே நாயகன் படத்துக்கான கிளைமேக்ஸ் காட்சியில் வேலு நாயக்கர் விடுதலையாகி வரும் போது சுட்டுக் கொல்லப்படுவது போல காட்சிப் படுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேக்கப் தொடங்கி கமல்ஹாசனின் திறமையான நடிப்பால் நாயகன் தற்போதும் ரசிக்கப்பட்டு வருவதாக மணிரத்னம் மகிழ்ச்சி தெரிவித்தார்.