ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடல்பாசி எடுக்கச் சென்ற மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து தீயிட்டு கொளுத்திய வடமாநில இளைஞர்கள் 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரின் மனைவி சந்திரா என்ற மீனவப் பெண் கடந்த செவ்வாயன்று காலையில் கடல்பாசி எடுப்பதற்காக சென்றுள்ளார். மாலையில் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணை மேற்கொண்ட போலீசார் வடகாடு காட்டுப் பகுதியில் சந்திராவை உயிரிழந்த நிலையில் அரைநிர்வாணமாக மீட்டனர். இதனை அடுத்து அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர். அங்கு தங்கியிருந்த 6 வடமாநில இளைஞர்களையும் பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
சந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் எடுத்து செல்ல முயன்றபோது மக்கள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். மக்களின் தாக்குதலுக்கான ஆளான 6பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் வடமாநில இளைஞர்கள் 3பேர் போதையில் சந்திராவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தீயிட்டு கொளுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3பேர் யார் என்பது தெரியாத நிலையில் 6பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வடகாடு பகுதியில் இயங்கி வரும் இறால் பண்ணைகளை மூட வலியுறுத்தி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.