17 ஆண்டுகளாக மகனை தேடி வந்த தந்தை.. கடைசி வரை முகத்தை பார்க்காமலேயே விபரீத முடிவு..!
Published : May 25, 2022 6:43 AM
17 ஆண்டுகளாக மகனை தேடி வந்த தந்தை.. கடைசி வரை முகத்தை பார்க்காமலேயே விபரீத முடிவு..!
May 25, 2022 6:43 AM
காணாமல் போன மகனை 17 ஆண்டுகளாக தேடி வந்த தந்தை மகன் முகத்தை கடைசி வரை பார்க்காமலேயே உயிரை மாய்த்து கொண்ட சோகம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர்கள் ராஜூ-மினி தம்பதி. இவருக்கு ராகுல் என்ற மகன் உண்டு. மகன் மீது அலாதி பிரியம் வைத்திருந்தார் ராஜூ. தன் மகன் பெயரிலேயே ராகுல் நிவாஸ் என்ற பெயரில் சொந்த வீட்டையும் கட்டியிருந்தார்.
குவைத்தில் ராஜூ பணி புரிந்து வந்த போது, கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி வீட்டருகேயுள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ராகுல் காணாமல் போய் விட்டான்.
தகவல் கிடைத்து, அடுத்த நாளே குவைத்தில் இருந்து தாய் நாடு திரும்பினார் ராஜூ. போலீசில் புகாரளித்தார். அவரும் மகனை தேடி அலைந்தார். எங்கும் கிடைக்கவில்லை. கேரள போலீஸ், கேரள புலானாய்வுத்துறை , கடைசியில் சி.பி.ஐ வசம் ராகுல் தொலைந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், எந்த பிடியும் இந்த வழக்கில் கிடைக்கவில்லை. ராகுல் காணாமல் போன பிறகு, ராஜூ தம்பதிக்கு ஷிவானி என்ற மகளும் பிறந்தாள்.
இதற்கிடையே, சிறுவன் கிடைக்கவில்லை என்று கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக 2014 ஆம் ஆண்டு சி.பி.ஐ கொச்சி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விட்டது. நீதிமன்றமும் அறிக்கையை ஏற்றுக் கொண்டது. கேரள வரலாற்றில் மிகுந்த மர்மமான வழக்கதாக இந்த வழக்கு கருதப்படுகிறது.
இதற்கிடையே, மகன் காணாமல் போனதால் பித்து பிடித்தவர் போல ஆகி விட்டார் ராஜூ. மீண்டும் குவைத்துக்கு வேலைக்கு சென்றவர் உடல் நலமில்லாமல் திரும்பினார். கடந்த மே 18 ஆம் தேதியுடன் ராகுல் காணாமல் போய் 17 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நிலையில், மே 22 ஆம் தேதி தன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் ராஜூ. கடைசி வரை மகனின் முகத்தை, பார்க்க முடியாமல் தந்தை ராஜூ தன் உயிரை மாய்த்துக் கொண்டது கேரள மக்களை சோகத்துக்குள் ஆழ்த்தியுள்ளது.