குவாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவாத்தை நடத்தினார். முன்னதாக, இந்தோ - பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்க குவாட் மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சிமாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றது. 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடியை மாநாட்டு அரங்கில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கைகுலுக்கி வரவேற்றார்.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, குறுகிய காலத்தில் உலகில் குவாட் அமைப்பு தனக்கென ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளதாகவும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வலுவான செயல்பாடு தொடங்கியிருப்பதாகவும் கூறினார்.
இந்தோ - பசிபிக் பிராந்திய எல்லை வரையறைகள், பிரச்சனைகளுக்கான சுமூக தீர்வு காண்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து குவாட் தலைவர்கள் ஆலோசித்தனர். இதனை அடுத்து, இந்தோ - பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்கும் முடிவுக்கு தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர்.
இதனை அடுத்து, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்தும், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, புதிதாக பொறுப்பெற்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.