மதுரையில் அம்மா உணவகத்தை தனியார் உணவகம் போல் மாற்றி பூரி, வடை, ஆம்லேட் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் இட்லி, சப்பாத்தி, பொங்கல் உள்ளிட்டவை அம்மா உணவகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. மதுரையிலுள்ள 10 அம்மா உணவகங்களிலும் ஏற்கனவே பணிபுரிந்த பெண் பணியாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டு உள்ளூர் கவுன்சிலர்களுக்கு ஆதரவானவர்கள் நியமிக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் புதூர் அம்மா உணவகத்தில் மலிவு விலை இட்லி, பொங்கலுக்குப் பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லேட் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாகவும் அதற்குத் தனியாக பணம் வசூல் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. அம்மா உணவகத்துக்காக அரசால் வழங்கப்படும் மூலப் பொருட்களைப் பயன்படுத்தியே இந்த வியாபாரம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.