குவாட் நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பரஸ்பர நலன்கள் தொடர்பாக தலைவர்களுடன் விவாதிக்க அந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள குவாட் அமைப்பின் 3ஆவது மாநாடு வரும் 24ஆம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது.
அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனி விமானத்தில் டோக்கியோ செல்கிறார். உக்ரைன் போர், காலநிலை மாற்றம் ஆகியவற்றோடு சீனாவின் ஆதிக்கம் தொடர்பாகவும் குவாட் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் சுமார் 40 மணி நேரம் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, 23 நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 24ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமராகும் ஆண்டனி அல்பனீஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ப்யூமியோ கிஷிடோ ஆகியோரை தனித்தனியே சந்திக்க உள்ள பிரதமர் மோடி, அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளார்.
மேலும், சுமார் 40 ஜப்பானிய நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களை சந்தித்து பேச உள்ள பிரதமர், அவர்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், டோக்கியோவில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியிலும் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.
இந்நிலையில் தனது ஜப்பான் பயணம் குறித்து தெரிவித்த பிரதமர் மோடி, பரஸ்பர நலன்கள் தொடர்பாக குவாட் அமைப்பின் தலைவர்களுடன் விவாதிக்க மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்.
மேலும், இந்தியா - ஜப்பான் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்நோக்கி உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அதேபோல், அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பின்போது பிராந்திய வளர்ச்சி மற்றும் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். மேலும், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடனான இருதரப்பு சந்திப்பையும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.