​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு - மத்திய அரசு

Published : May 22, 2022 6:21 AM

பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு - மத்திய அரசு

May 22, 2022 6:21 AM

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீது 8 ரூபாய் டீசல் மீது 6 ரூபாய் கலால் வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் 15 சதவீதத்தைக் கடந்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாய், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதனால் சில்லரை விலையில் பெட்ரோலின் விலை 9 ரூபாய் 50 காசுகள் குறையும். டீசல் விலை 7 ரூபாய் குறையும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்றுமுதல் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் விலையைக் குறைக்காத எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களிலும் மக்களின் சுமையைக் குறைக்க  வரியை குறைக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே கேரளா உள்ளிட்ட சில மாநில அரசுகள் வரியைக் குறைப்பதாக அறிவித்துள்ளன. மேலும் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்குள் வாங்கும் பயனாளிகளுக்கு ரூபாய் 200 மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 9 கோடி பேர் பயனடைவர். சிமெண்ட் விலையைக் குறைக்கவும், பிளாஸ்டிக், ஸ்டீல் விலையை குறைக்கும் விதத்தில் அவற்றின் மூலப் பொருட்களின் இறக்குமதி வரியை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு கூடுதலாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உர மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.