மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியை கடந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் பயிரிடுவதற்காக அணையில் இருந்து மே 24ஆம் நாள் முதல் தண்ணீரைத் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்திலும் தமிழகத்திலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்ததால் நேற்று ஒகேனக்கல்லில் நீர்வரத்து நொடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 35ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி காவிரியில் மேட்டூர் அணைக்கு நொடிக்கு 46 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 115 அடியாகவும், நீர் இருப்பு 86 புள்ளி 2 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து தொடர்வதால் அணை விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணைப்பகுதியில் பொதுப்பணித்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
குறுவை நெல் பயிரிடுவதற்காக ஜூன் 12ஆம் நாள் முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்த ஆண்டு அதற்கு முன்பே அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் மே 24 முதல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நாடு விடுதலை அடைந்த பின் குறுவைப் பயிருக்காக ஜூன் 12 அல்லது அதற்கு முன் தொடர்ந்து மூன்றாண்டுகள் நீர் திறந்து விடப்படுவது இது இரண்டாவது முறையாகும். மே மாதத்தில் தண்ணீர் திறந்து விடுவது இதுவே முதல்முறையாகும். இதனால் டெல்டா மாவட்டங்களில் 4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.