மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் 115 அடியைத் தாண்டியுள்ளது. விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழக எல்லைப் பகுதிக்கு அதிகளவில் நீர்வரத்து காணப்பட்டது. ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலுவில் நேற்று 45,000 கனஅடி நீர் வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதனிடையே, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.35 அடியாக உள்ளது. காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கு 46 ஆயிரத்து 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் நீர் இருப்பு 86.24 டி.எம்.சி. ஆக உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக 1,500 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பைப் பொறுத்து ஜூன் 12ந் தேதி டெல்டா பாசனத்திற்காக அணை திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், ஒரு வாரத்திற்குள் அணை முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.