​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கையின் பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்கே

Published : May 12, 2022 6:53 PM



இலங்கையின் பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்கே

May 12, 2022 6:53 PM

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுள்ளார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கை மக்களுக்கு நேற்று உரையாற்றிய அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, விரைவில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என தெரிவித்திருந்தார். முன்னதாக ரணில் விக்ரமசிங்கேவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அவர் பிரதமர் பதவியை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், இன்று மாலை அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து செய்து வைத்தார். ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவையில் 15 பேர் மட்டுமே அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர் என்றும், அவர்கள் நாளை காலையில் பதவி ஏற்க உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொருளாதார நெருக்கடி, மக்களின் போராட்டங்களை அடுத்து மூன்று தினங்களுக்கு பின்னர் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில் ரணில் விக்ரமசிங்கே பொறுப்பு ஏற்றுள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கேவின் கட்சிக்கு அவர் மட்டுமே எம்.பியாக உள்ளார். இருந்தபோதும் இலங்கை பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் ரணிலின் நியமனத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, மைத்ரி பாலசிறிசேனா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திங்கட்கிழமை அன்று அந்நாட்டு நாடாளுமன்றம் கூட உள்ளது.ஆறாவது முறையாக இலங்கை பிரதரமாக பொறுப்பேற்றுள்ள ரணிலுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துடன், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டிய இக்கட்டும் காத்திருக்கிறது.