ஆடிட்டர் தம்பதி கடத்தல்.. பண்ணை வீட்டில் கொன்று புதைத்த கொடூரம்.. ஓட்டுனர் வெறிச்செயல்..!
Published : May 08, 2022 6:21 AM
ஆடிட்டர் தம்பதி கடத்தல்.. பண்ணை வீட்டில் கொன்று புதைத்த கொடூரம்.. ஓட்டுனர் வெறிச்செயல்..!
May 08, 2022 6:21 AM
மகளின் பிரசவத்திற்காக அமெரிக்காவுக்கு சென்று விட்டு விமானத்தில் திரும்பிய சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டரையும் அவரது மனைவியையும் , விமான நிலையத்தில் இருந்து கடத்திச்சென்று பண்ணை வீட்டில் கொலை செய்து புதைத்ததாக அவர்களது கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். பல லட்ச ரூபாய் நகை- பணத்துக்காக நடந்த கொடூர கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் , அவரது மனைவி அனுராதா. 60 வயதான ஸ்ரீகாந்த் கடந்த மாதம் அமெரிக்காவில் வசித்து வரும் தனது மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காக சென்றுவிட்டு, சனிக்கிழமை அதிகாலை 03.30 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து அவர்களது ஓட்டுநரான கிருஷ்ணா என்பவர் இரண்டு பேரையும் காரில் அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சுனந்தா தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
நீண்ட நேரமாக செல்போனில் தொடர்பு கொள்ள இயலாததால் சந்தேகமடைந்த சுனந்தா, தனது உறவினரான அடையாறு இந்திரா நகரில் வசிக்கும் திவ்யாவை தொடர்பு கொண்டு வீட்டிற்கு நேரில் சென்று தன்னுடைய பெற்றோர்களை பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி திவ்யா தனது கணவர் ரமேஷ்சுடன் பகல் 12.30 மணி அளவில் ஆடிட்டர் வீட்டை வந்து பார்க்கும்போது வீடு பூட்டி இருந்தது. அக்கம் பக்கம் இருப்பவர்களின் உதவியுடன் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்ததில், உள்ளே பொருட்கள் கலைந்து கிடந்ததாலும், இருவரும் வீட்டில் இல்லாத காரணத்தாலும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல், உதவி ஆணையர் கவுதமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விமான நிலையத்தில் இருந்து ஓட்டுனர் கிருஷ்ணா அழைத்துச்சென்றது உறுதியானதால் அவரது செல்போன் நம்பரை வைத்து தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் ஓட்டுனர் கிருஷ்ணா ஆந்திரா பகுதியில் காரில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக சென்னை போலீசார் , ஆந்திர போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சரியாக மாலை 6.30 மணியளவில் கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும், ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனை சாவடியில் வைத்து அவர் ஓட்டி சென்ற இன்னோவா காருடன் போலீசார் மடக்கிப்பிடித்தனர். ஓட்டுனர் கிருஷ்ணா கும்பலிடம் ஏராளமான நகை பணம் இருந்ததால், அவர்களிடம் ஆடிட்டர் எங்கே என்று நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலமானது.
ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டில் 10 வருடங்களாக நம்பிக்கைக்குரிய ஓட்டுனராக வேலைப்பார்த்து வந்த கிருஷ்ணாவுக்கு கூடாத சகவாசத்தால் விபரீத திட்டம் தோன்றி உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை பணம் இருக்கும் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டில் ஆதரவின்றி கணவன் மனைவி இருவர் மட்டும் வசித்து வருவது குறித்து தனது கூட்டாளிகளிடம் தெரிவித்துள்ளார். அவர்களது திட்டப்படி அமெரிக்காவில் இருந்து ஊர் திரும்பியதும் கணவன் மனைவியை மிரட்டி நகை பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவரையும் மயிலாப்பூர் வீட்டிற்கு அழைத்து சென்று கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர்களை மிரட்டி 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்ததோடு, தங்களை காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக கணவன் மனைவி இருவரையும் கொலை செய்து, சடலங்களை காரில் தூக்கிபோட்டு எடுத்துச்சென்றுள்ளனர்.
இருவரது சடலங்களையும் கிழக்கு கடற்கரை சாலையில், நெமிலிச்சேரியில் ஸ்ரீகாந்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் புதைத்தது விட்டு , அவருக்கு சொந்தமான இன்னோவா காரையும் திருடிக் கொண்டு ஆந்திராவை நோக்கி தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.
பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட இருவரது சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்து ஆறு மணி நேரத்தில் பக்கத்து மாநிலத்தில் வைத்து கொடூர கொலைகாரர்களை போலீசார் மடக்கியது குறிப்பிடத்தக்கது.