இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். இன்று நாடு தழுவிய முழு அடைப்பிற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகி இடைக்கால அரசை அமைக்கக் கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் அரசு ஊழியர்களும் நேற்று களமிறங்கியதால் கொழும்பில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ரயில் ஓட்டுநர்களின் பற்றாக்குறையால் கொழும்பு, ரம்புக்கனை உள்ளிட்ட பகுதிகளில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் ரயில் நிலையங்களில் முடங்கினர்.
கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், இளைஞர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் விரட்டினர்.
பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, இலங்கை நாடாளுமன்றத்தை நோக்கி பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் பேரணியாகச் சென்றனர். கோத்தபய மற்றும் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என மாணவர்கள் தொடர் கோஷம் எழுப்பினர். மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் விரட்டியடித்தனர்.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்தக் கட்டமாக இன்று முழு அடைப்பு போராட்டத்தை தொழிற்சங்கங்கள் கையில் எடுத்துள்ளன. நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.