தமிழகம் முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு துவங்கிய தேர்வு, சரியாக பகல் 1.15 மணிக்கு நிறைவு பெற்றது.
முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக மாணாக்கர்கள் தெரிவித்தனர்.
திருப்பூரில் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவி, ஆம்புலன்ஸில் தேர்வெழுத வந்தார். ரிதன்யா என்ற அந்த மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் வயிற்றிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவி, செவிலியர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸில் வந்து தேர்வெழுதினார்.