பீகாரில் 3000 கி.மீ. நடைபயணம் செல்ல பிரஷாந்த் கிஷோர் திட்டம்.!
Published : May 05, 2022 2:04 PM
காந்தி பிறந்த நாளன்று பீகாரில் மூவாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபயணத்தைத் தொடங்கப் போவதாக தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பீகார்த் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 4 மாதங்களில் பீகாரில் உள்ள புகழ்பெற்ற ஆட்களைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும், நல்லாட்சிக்கான இயக்கத்தைத் தொடங்க உதவும்படி அவர்களைக் கேட்டுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
அக்டோபர் இரண்டாம் நாள் மேற்குச் சம்பராணில் காந்தி ஆசிரமத்தில் இருந்து நடைபயணம் தொடங்கும் எனத் தெரிவித்தார்.
காங்கிரசுக்கு ஆலோசனை கூறியது பற்றிச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மேற்கொண்டு செய்ய வேண்டியதைத் தீர்மானிப்பது காங்கிரஸ்தான் எனத் தெரிவித்தார்.
காங்கிரசுக்குப் பிரஷாந்த் கிஷோர் தேவையில்லை என்றும், அங்கு திறமையான ஆட்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.