​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளையராஜா ஊரில் கழிவறையை திறக்க மறுக்கும் அடாவடி ஆபீஸர்.. மாவட்ட ஆட்சியர் பார்வைபடுமா ?

Published : Apr 12, 2022 9:07 AM



இளையராஜா ஊரில் கழிவறையை திறக்க மறுக்கும் அடாவடி ஆபீஸர்.. மாவட்ட ஆட்சியர் பார்வைபடுமா ?

Apr 12, 2022 9:07 AM

தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் புதிதாக கட்டப்பட்டு  நீண்ட நாட்களாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கபடாமல் இருக்கும் கழிப்பறை, எப்போது திறக்கப்படும் என்று பேரூராட்சி கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் திறக்க முடியாது என்று அடாவடியாக செல்போனில் விளையாடிக் கொண்டே பதில் அளித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

இசைஞானி இளையராஜா பிறந்த பெருமைக்குரிய பண்ணைப்புரத்தில் தான் பேரூராட்சி சார்பில் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு, மாதங்கள் பல கடந்த நிலையிலும் திறக்கப்படாமல் பூட்டப்பட்டுக் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது..!

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சியில் 13 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரதப் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தலா 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கழிவறைகள் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டன.

பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ள நிலையில், 13-வது வார்டைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான ஜெயக்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் அந்தக் கழிவறையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் பேரூராட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் பிரச்சனையை எழுப்பினர்.

கழிவறை மக்களின் அத்தியாவசிய தேவை என்பதை புரிந்து கொள்ளாத பேரூராட்சி செயல் அலுவலர் புளோஃரி ஏஞ்சல்ஸ் , தனது மொபைல் போனில் விளையாடியபடியே , அப்படி எல்லாம் உங்களுக்கு செஞ்சு தர முடியாது. உங்களுக்கு தெரிஞ்சத பாருங்க. என்னோட இஷ்டத்துக்கு தான் வேலை செய்ய முடியும் என்று பேசியது அனைவரையும் எரிச்சலடைய வைத்தது.

மேலும் அப்படி நான் வேலை செய்றது பிடிக்கவில்லை என்றால் வேறு ஒரு செயல் அலுவலரை நியமித்து உங்கள் வேலையை முடித்துக் கொள்ளுங்கள் என்னால் செய்ய முடியாது என்று மொபைல் போனில் விரல்களால் விளையாடியபடியே பதில் கூறினார்.

அந்தக் கழிவறையை எப்போது திறப்பீர்கள்? பொதுமக்களுக்கு பதில் சொல்ல இயலவில்லை. ஒரு மாதம்,அல்லது 6 மாதம், அல்லது ஒரு வருடம் ஆகும் என்றாலும் கூட தேதியை மட்டும் கூறுங்கள் என்று உறுப்பினர்கள் எவ்வளவோ கேட்டுக் கொண்ட போதும், அவர் எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் மொபைல் போனில் மூழ்கியபடியே தனது ((திமிரான)) பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

இதனை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் அந்தக் கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்ததாக கூறி வெளியேறினர். அடாவடியாக நடந்து கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மக்கள் பயன்பாட்டுக்கு அந்த கழிவறையை திறந்துவிட வேண்டும் என்பதெடெ அனைவரின் எதிர்பார்ப்பு