அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா, அறிவிக்கப்பட்ட நிலையில், 2017ல் அக்கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில், அவரை பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை எதிர்த்து சசிகலா வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியதை உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஏற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக சசிகலா நாமக்கல்லில் பேட்டியளித்தார்.