மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்கிற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு எதிராகத் தமிழகச் சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுப் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நுழைவுத் தேர்வு மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்குத் தகுதியான பெரும்பான்மையினருக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
மாநில அரசுகளின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டுப் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்துச் செய்திட மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்யவும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை நடத்தவும் வலியுறுத்தும் தீர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.