​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் பைடன் காணொலி மூலம் இன்று சந்திப்பு.!

Published : Apr 11, 2022 6:06 AM

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் பைடன் காணொலி மூலம் இன்று சந்திப்பு.!

Apr 11, 2022 6:06 AM

இந்தியா- அமெரிக்கா இடையே அமைச்சர்கள் மட்டத்திலான 2+2 பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி- அதிபர் ஜோபைடன் ஆகியோர் காணொலி மூலம் இன்று சந்தித்துப் பேச இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா- இந்தியா இடையேயான உறவு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இரு நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான 2+2 பேச்சுவார்த்தை 2018ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

நான்காவது முறையாக நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், இந்தியா தரப்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர் ஆகியோரும், அமெரிக்கா தரப்பில் லாயிட் ஆஸ்டின், ஆண்டனி பிளிங்கன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

காலநிலை மாற்றம், உலக பொருளாதாரம், இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் உக்ரைன் விவகாரமும் இந்த சந்திப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளில்லா டிரோன் விமானங்கள், கடற்படைக்கு போர் விமானம், கடல்சார் ரோந்துப் பணிக்கான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவைகளை இந்தியா கொள்முதல் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் காணொலி மூலம் இன்று பேச்சு நடத்துகின்றனர். உக்ரைன் விவகாரம், இந்தோ - பசிபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் ஜோ பைடனும், மோடியும் பேச இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.