பழங்கால முறையைக் கையாண்டு திருடு போன நகையை மீட்ட காவல் ஆய்வாளர்
Published : Apr 10, 2022 4:45 PM
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் இருந்து திருடப்பட்ட நகையை பழங்கால முறையைக் கையாண்டு காவல் ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளார்.
மார்க்கையன்கோட்டையைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் கடந்த 6ஆம் தேதி குடும்பத்துடன் ஊர் திருவிழாவைக் காணச் சென்றபோது, அவரது வீட்டில் இருந்த 12 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோனது. பூட்டு உடைக்கப்படாமல் திருடுபோனதும் அவர்கள் வழக்கமாக சாவியை ஜன்னல் பக்கத்தில் வைப்பதும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே சாவி இருக்கும் இடம் அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த நபர்தான் திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
இதனையடுத்து சின்னமனூர் காவல் ஆய்வாளர் சேகர், நகையை மீட்க பழங்கால முறையை கையில் எடுத்தார். அதன்படி ஊருக்கு நடுவே அண்டா ஒன்றை வைத்தவர், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மாட்டுச் சாணத்தை உருண்டைகளாக உருட்டிக் கொண்டு வந்து அதில் போட வேண்டும் என்றும் நகையைத் திருடிய நபர் அதனை தாம் கொண்டு வரும் சாண உருண்டைக்குள் வைத்து போட்டுச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மீறினால் காவல்துறை வழக்கமான பாணியில் விசாரித்து கண்டுபிடித்துவிடுவோம் என்றார். அவர் எதிர்பார்த்தபடியே, சாண உருண்டைகளைக் கரைத்தபோது, அவற்றில் ஒன்றில் திருடப்பட்ட நகை இருந்தது. விரைவில் பணத்தையும் மீட்டு விடுவோம் என காவல் ஆய்வாளர் சேகர் தெரிவித்துள்ளார்.