பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இம்ரான்கான் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
இம்ரான்கானுக்கு எதிராக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததால், வாக்கெடுப்பு நடைபெறுவதை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தார். இந்த நடவடிக்கை செல்லாது என்றும், தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று பகலில் நடைபெறுவதாக இருந்த பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு நள்ளிரவில் நடைபெற்றது. அவைக்கு இம்ரான்கான் வந்ததும், சபாநாயகரும், துணை சபாநாயகரும் பதவி விலகுவதாக அறிவித்தனர். பின்னர் ஆளும் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினர்.
இடைக்கால சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. 342 பேர் கொண்ட அவையில் 174 பேர் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் பேசிய நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம்லீக் கட்சித் தலைவர் ஷபாஜ் ஷெரீப், தமது கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றபின் யார்மீதும் பழிவாங்கும் நடவடிக்கையோ, கைது நடவடிக்கையோ எடுக்கப்பட மாட்டாது என்றார்.
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக ஷபாஜ் ஷெரீப் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே அந்நாட்டு அதிகாரிகள் யாரும் வெளிநாடு செல்லக்கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.