​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2 வயதில் குழந்தை இருக்க காதல் மனைவியை கொன்று காட்டில் புதைத்த கணவன்.. வேறு பெண்ணுடன் தொடர்பால் விபரீதம்.!

Published : Mar 30, 2022 6:54 AM



2 வயதில் குழந்தை இருக்க காதல் மனைவியை கொன்று காட்டில் புதைத்த கணவன்.. வேறு பெண்ணுடன் தொடர்பால் விபரீதம்.!

Mar 30, 2022 6:54 AM

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே கல்லூரிக்காதலியை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர், தனது மனைவியை கொலை செய்து காட்டில் புதைத்ததாக 3 மாதம் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த வடுகன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த போது விநாயகம் அதே கல்லூரி மாணவியான குடியாத்தம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சுப்ரஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி முதலில் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட இருவரும் சென்னை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். பிறகு சுப்ரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அங்கிருந்து சொந்த ஊரான கே.வி.குப்பம் வடுகன்தாங்கல் பகுதியில் உள்ள விநாயகத்தின் வீட்டில் வசித்து வந்தனர்.

சுப்ரஜாவிற்கு 2 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில் விநாயகம் உள்ளூரில் தனக்கு கிடைத்த தினக்கூலி வேலைக்கு சென்று வந்தான்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் சுப்ரஜாவை அவரது உறவினர்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று கூறப்படுகிறது .

குறிப்பாக சுப்ரஜாவின் காதல் திருமணத்துக்கு பின்னர் அவரது தந்தை இறந்து விட்டதால் சுப்ரஜாவுடன் அவரது அத்தை தனலெட்சுமி என்பவர் மட்டுமே நேரடியாகவும், செல்போனிலும் பேசிவந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவராலும் சுப்ரஜாவை தொடர்பு கொள்ள இயலாததால் நேரடியாக வீட்டுக்கே சென்று பார்த்துள்ளார். வீட்டில் சுப்ரஜா இருந்ததற்காண அடையாளம் ஏதுவும் இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சுப்ரஜாவின் அத்தை தனலட்சுமி சுப்ரஜாவை காணவில்லை எனவும் சுப்ரஜாவை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறி கே வி குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விநாயகத்தின் வீட்டுக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்ட போது ஊதாரி தனமான வாழ்க்கையால் நிகழ்ந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சுப்ரஜாவுக்கும் விநாயகயதுக்கும் திருமணம் முடிந்து ஆண் குழந்தை பிறந்த பின்னர் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது . சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் கூலிவேலைக்கு சென்ற போது போதை பழக்கத்துக்கு அடிமையான விநாயகத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுப்ரஜா இதனை அறிந்து விநாயகத்துடன் கடுமையாக சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனது உல்லாச வாழக்கைக்கு தடையாக இருக்கும் மனைவி சுப்ரஜாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய விநாயகம், கடந்த ஜனவரி 19ஆம் தேதி சுப்ரஜாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி முதினாம்பட்டு காட்டுப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சுப்ரஜாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான்.

தனது திட்டப்படி முன் கூட்டியே அங்கு பதுங்கி இருந்த தனது தம்பி விஜயன்மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் துணையுடன் , சுப்ரஜாவின் சடலத்தை தூக்கிச்சென்று சுடுகாட்டில் புதைத்ததாக விநாயகம் போலீசில் வாக்குமூலம் அளித்தான்.

இதையடுத்து வினாயகம் மற்றும் பெண்ணின் உறவினர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவன் அடையாளம் காட்டிய இடத்தில் சுப்ரஜாவின் எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்தனர். இதனை பார்த்த சுப்ரஜாவின் தாயும் தங்கையும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

உடல்கூறு ஆய்வுக்காக அவை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பெண் மாயமான வழக்கை, கொலை வழக்காக மாற்றி கே வி குப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோரை பிரிந்து காதலனை நம்பிச்சென்ற பெண்ணை தனது ஆசை தீர்ந்தவுடன் காதல் கணவனே கொன்று புதைத்து 2 வயது குழந்தையை ஆதரவற்ற நிலைக்கு தள்ளிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.