​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைக்க ரஷ்யா ஒப்புதல்...!

Published : Mar 29, 2022 10:07 PM

ராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைக்க ரஷ்யா ஒப்புதல்...!

Mar 29, 2022 10:07 PM

துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, உக்ரைனின் இரு இடங்களில் இருந்து ராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் - ரஷ்யா இடையே ஒரு மாதத்திற்கு மேல் போர் நடைபெறும் நிலையில்,துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் ரஷ்யாவைச் சேர்ந்த விளாதிமிர் மெடின்ஸ்கி உள்ளிட்ட குழுவினரும், உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலஸ்கி ரெஸ்னிகோவ் உள்ளிட்ட குழுவினரும் துருக்கி பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹூல்சி அகார், வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லட் சாவ்சோலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடுநிலை நாடாகவும், அணு ஆயுதம் இல்லாத நிலையிலும் தொடர உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அடுத்து உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிகீவ் நகரங்களில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரமாக குறைக்க ரஷ்யா ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.

அதேபோல், முறையான அமைதி ஒப்பந்தத்தை உக்ரைன் தரப்பில் தாக்கல் செய்தால் அதனை பரிசீலிக்க தயாராக உள்ளதாகவும் ரஷ்யா தரப்பில் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு பேசிய ரஷ்ய பிரதிநிதி விளாடிமிர் மெடின்ஸ்கி, இன்றைய பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள வகையில் இருந்ததாக கூறினார்.

இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் 5 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.