சேலம் மாவட்டம் ஆத்தூரில் செல்போன் பேசிக் கொண்டே விதியை மீறி 16 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற டிராக்டர் உணவகத்திற்குள் புகுந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பரோட்டா மாஸ்டருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
சரவணன் என்பவருக்குச் சொந்தமான உணவகத்தில் இன்று காலை சிலர் உணவருந்தி கொண்டிருந்தனர். அப்போது வ.ஊ.சி நகரில் இருந்து முல்லைவாடி நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்று திடீரென ஓட்டலுக்குள் புகுந்தது.
இந்த விபத்தில், பரோட்டா மாஸ்டர் உட்பட 2 பேர் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணையில், விபத்து ஏற்படுத்திய டிராக்டரில் 5-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்ததும், அதில் 16 வயது சிறுவன் விதியை மீறி டிராக்டரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
மேலும், டிராக்டரை இயக்கிய சிறுவன் செல்போன் பேசிக் கொண்டே வந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய நிலையில், சிறுவனையும், டிராக்டர் உரிமையாளர் ராஜாவையும் போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர் நகரப்பகுதியில் இது போன்ற கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், டிராக்டர்களை விதியை மீறி சிறுவர்கள் ஓட்டிவருவது வாடிக்கையாகி வருவதாக கூறும் அப்பகுதி மக்கள், போக்குவரத்து போலீசார் கண்காணிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.