விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரமற்று இருந்ததாக கூறப்படும் கட்டில் உடைந்து விழுந்த விபத்தில், அதில் இருந்த பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கீழே விழுந்து படுகாயமடைந்தது.
பரங்கிநாதபுரத்தை சேர்ந்த முத்துலட்சுமிக்கு கடந்த 5 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாயும்,சேயும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்களது கட்டிலின் ஒருபக்கம் உடைந்து விழுந்ததில் அதில் இருந்த பச்சிளம் குழந்தை கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, குழந்தை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள விருதுநகர் அரசு மருத்துவமனையின் டீன் சங்குமணி, பழைய கட்டில் என்பதால் அதில் வெல்டிங் விடுபட்டு கட்டில் உடைந்ததாகவும், தற்போது காயமடைந்த குழந்தைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறினார்.