2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் என அறிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரத்தில் எண்ணி முடிவுகளை அறிவிக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு வழக்கை விசாரித்த தனிநீதிபதி, நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்தார். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் அனைத்து உத்தரவுகளுக்கும் தடை விதித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தேர்தல் செல்லும் எனவும், வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிவுகளை அறிவிக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும், மனுதாரர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, வாக்கு எண்ணிக்கைக்கான தேதி, இடம் உள்ளிட்ட விபரங்களை மூன்று வாரங்களுக்கு அறிவிப்ககூடாது என தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.