கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களை மட்டும் பேருந்தை விட்டு இறக்கிவிட்டதாகக் கூறி, அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயன்ற சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த புதன்கிழமை மாலை நைனார்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து மங்களூர், சிறுப்பாக்கம், சித்தேரி வழியாக சின்ன சேலம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனர்.
படிகளில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை மட்டும் கீழே இறங்குமாறு பேருந்து ஓட்டுநர் கூறியுள்ளார். அவர்கள் கேட்காததால், பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறி, அவர்களை இறக்கிவிட்டுள்ளார்.
மறுநாள் அவ்வழியாகச் சென்ற பேருந்தை மறித்த சித்தேரி கிராம மக்கள், தங்கள் ஊர் பிள்ளைகளை மட்டும் இறக்கிவிட்டதாகக் கூறி ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஓட்டுநரைத் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.