​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பரப்புரைக்கு கூடுதலாக 4 மணி நேரம்., பேரணி, ஊர்வலங்களுக்கு அனுமதி - தேர்தல் ஆணையம்

Published : Feb 11, 2022 2:33 PM

பரப்புரைக்கு கூடுதலாக 4 மணி நேரம்., பேரணி, ஊர்வலங்களுக்கு அனுமதி - தேர்தல் ஆணையம்

Feb 11, 2022 2:33 PM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகளை வழங்கிய மாநில தேர்தல் ஆணையம், பரப்புரை மேற்கொள்வதற்கான நேரத்தை நீட்டித்து அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையம், வாக்கு எந்திரத்தில் பொருத்த சின்னத்துடன் கூடிய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சியளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, கூடுதலாக 4 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதியளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரத்திற்காக மேற்கொள்ளப்படும் சாலை நிகழ்ச்சிகள், பாத யாத்திரைகள், சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைக்கு தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய அலுவலர்களிடம் அனுமதி பெற்று பேரணிகள், ஊர்வலங்களில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு முன்கூட்டியே தெரிவித்து, ஒப்புதல் பெற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.