வடபழனி கோவில் நில மோசடி விவகாரம்-வேளச்சேரி சார் பதிவாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு
Published : Feb 10, 2022 3:14 PM
வடபழனி கோவில் நில மோசடி விவகாரம்-வேளச்சேரி சார் பதிவாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு
Feb 10, 2022 3:14 PM
சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான, 258 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாக வேறொருவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக, வேளச்சேரி சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
வேளச்சேரி சார் பதிவாளாக பணிபுரிந்து வரும் விவேகானந்தன், இதற்கு முன்னர் தாம்பரத்தில் பணிபுரிந்து வந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன் பங்காரு சாமி நாயுடு என்பவர் வடபழனி முருகன் கோவிலுக்கு தானப்பத்திரம் எழுதி வைத்த மாடம்பாக்கம் பகுதியிலுள்ள சுமார் 10 ஏக்கர் நிலத்தை, விவேகானந்தன் தனிநபருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு அருகிலேயே விழுப்புரத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது நிலமும் இருந்துள்ளது. இந்த நிலத்தை பிரித்து பத்திரப்பதிவு செய்யும் போது, கந்தசாமியின் மகன்களான ரமேஷும், மணியும் சேர்ந்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தையும் சேர்த்து சார் பதிவாளர் உதவியோடு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சார் பதிவாளர் விவேகானந்தன் கந்தசாமி அவரது இரு மகன்கள் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.