ஹிஜாப் மனுக்கள் - அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Published : Feb 10, 2022 2:36 PM
ஹிஜாப் தொடர்பாகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் முறையீட்டை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கர்நாடகக் கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிந்து செல்லத் தடை விதித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை நேற்று விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித், விரிவான அமர்வுக்கு மாற்றப் பரிந்துரைத்தார். இதையடுத்துத் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காசி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் உள்ள மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் முறையீட்டை அவசரமாக விசாரிக்க வழக்கறிஞர் கோரினார். உயர் நீதிமன்றத்தின் அமர்வு இதை விசாரிக்கும் நிலையில் இதில் ஏன் தலையிட வேண்டும் எனக் கூறி முறையீட்டைப் பட்டியலிட நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.