உத்தரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக இன்று 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசச் சட்டமன்றத்துக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக மேற்கு உத்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வரிசையில் நின்று வாக்களித்தனர்.
25 ஆயிரத்து 849 வாக்குச்சாவடிகளில் மாநிலக் காவல்துறையினருடன் மத்தியத் துணைராணுவப் படையைச் சேர்ந்த ஐம்பதாயிரம் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன்றைய தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் பாஜக, சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.