ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து அக்னி 5 ஏவுகணையைப் புதன் இரவு 7.50 மணியளவில் போர்த் தந்திரப் படைப்பிரிவினர் செலுத்திச் சோதித்துப் பார்த்தனர். இந்த ஏவுகணை சென்ற பாதையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பினர் ராடார் மூலம் கண்காணித்தனர்.
இந்தியாவின் வடக்கு, கிழக்கு எல்லைகளில் படைவலிமையைச் சீனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியா ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது. இரவிலும் ஏவுகணையைச் செலுத்தும் திறனைச் சோதித்துப் பார்ப்பதே இந்தச் சோதனையின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
மூன்று கட்டத் திட எரிபொருளைக் கொண்ட அக்னி 5 ஏவுகணை, உயர் வழிகாட்டு அமைப்பு மூலம் தரையில் இருந்து தரையிலக்கைத் தாக்கும் திறன்கொண்டதாகும். ஆயிரம் முதல் இரண்டாயிரம் கிலோமீட்டர் வரை தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அக்னி பிரைம் வகை ஏவுகணையின் சோதனையை ஜூன் 28ஆம் நாளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நடத்தியதும் குறிப்பிடத் தக்கது.