நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சிறு பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து விவசாயி ஒருவர் பரிதாபமாக பலியானார்.
வல்லிபுரம் - வாழவந்தி சாலை ராசாம்பாளையத்தில் சாலையின் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதான சாலையின் குறுக்கே 6 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டியுள்ளனர்.
எல்லப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவர் அதிகாலை தனது டிவிஎஸ் 50 வாகனத்தில் அவ்வழியாகச் சென்றுள்ளார். வெளிச்சம் குறைவாக இருந்ததால், சாலையின் குறுக்கே இருக்கும் பள்ளம் பார்வைக்குத் தெரியாமல் போகவே, வாகனத்துடன் பள்ளத்துக்குள் பாய்ந்த சுப்பிரமணி, கழுத்தெலும்பு முறிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
பள்ளத்தின் இருபுறமும் எச்சரிக்கைப் பலகையோ, பேரி கார்டோ அமைக்காமல் ஒப்பந்ததாரர் அலட்சியமாக விட்டதே விபத்துக்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.