காதலித்து திருமணம்.. மருமகள் மீது கோடாரி வீசிய திகில் சம்பவம்..! வீடியோ ஆதாரத்துடன் புகார்
Published : Oct 27, 2021 6:35 PM
காதலித்து திருமணம்.. மருமகள் மீது கோடாரி வீசிய திகில் சம்பவம்..! வீடியோ ஆதாரத்துடன் புகார்
Oct 27, 2021 6:35 PM
கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அருகே காதல் திருமணம் செய்த மகனையும், மருமகளையும் , வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி முதியவர் ஒருவர் கோடாரியால் தாக்கும் பரபரப்பு வீடியோக் காட்சிகள் வெளியாகி உள்ளன. காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆத்திரத்தில் சுவிட்ச் போர்டில் கோடாரியால் வெட்டியவர் நூலிழையில் உயிர்தப்பி, காமிராவில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அடுத்த ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது இளைய மகன் மணிமாறன் , இவர் 8 வருடங்களுக்கு முன்பு வேறு சாதியை சேர்ந்த பெண்ணான சத்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணமான நாள்முதல் காதலுக்கு கடுமையான எதிரியாக மாறிய ஜெயராமன் மகனையும், மருமகளையும் ஆபாசமாக பேசுவதையும், தகராறு செய்து தாக்குவதையும் வாடிக்கையாக செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த 24 ந்தேதி மகன் மணிமாறன் ஊரில் இல்லாத நேரத்தில் மருமகள் சத்தியாவிடம் தகராறு செய்த ஜெயராமன் தாக்கியதாக கூறப்படுகின்றது. வீட்டிற்கு வந்த கணவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சத்தியா தெரிவித்ததால் அதனை தட்டிக்கேட்ட மணிமாறனையும், சத்தியாவையும் ஆபாசமாக பேசி வீட்டை விட்டு விரட்ட கோடாரியை ஓங்கியபோது, கதவை மூடியதால் வெட்டு கதவில் விழுந்தது.
ஆத்திரம் அடங்காமல் அக்னிக் குழம்பாய் பொங்கிய ஜெயராமன், அருகில் இருந்த மேஜை மீது ஏறிய வேகத்தில் கோடாரியால் சுவிட்ச் போர்டில் ஓங்கி வெட்ட அந்த பெட்டி உடைந்து நொறுங்கியது, அதிர்ஷ்டவசமாக அந்த கோடாரி முனையில் மின்சாரம் பாய்வதற்குள் உயிர்தப்பினார்.
அலமாரியில் இருந்த டிவி யை உடைக்கும் நினைப்பில் அதனை பிடித்து திருப்பினார், டிவியை உடைத்தால் சேதாரம் பெரிய அளவில் கொடுக்க வேண்டி வருமோ ? என்று அங்கிருந்த சிறிய பொருளைத் தூக்கி வீசி உடைத்தார். அடுத்து, பொருட்களை உருட்டி உடைக்க சமையல் அறைக்குள் புகுந்தார் ஜெயராமன்.
ரகளைக்கு முன்னதாக மறுபக்க கதவை பூட்டிவிடக்கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக கதவை தனியாக கழற்றி எடுத்து வந்து தனது அறைக்குள் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டார். இதற்கிடையே மணிமாறனின் சகோதரரும், தந்தையுடன் சேர்ந்து காதல் திருமணம் செய்த தம்பதியரை அவதூறாக பேசி தாக்கி முயன்றதாக கூறப்படுகின்றது.
செல்போனில் வீடியோ எடுப்பதை பார்த்ததும் சத்தமிட்டவர்களும், ரகளை செய்த ஜெயராமனும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் ஏறிதப்பிச்சென்றனர்.
இதையடுத்து தங்கள் மீது தாக்குதல் நடத்தி பொருட்களை அடித்து உடைத்தது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வீடியோ ஆதாரத்துடன் சத்தியா புகார் அளித்தார். அதில் தான் சார்ந்த சாதியைக் குறிப்பிட்டு கணவர் வீட்டார் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.