சீனா, புதிதாக ஏற்படுத்தி உள்ள நில எல்லை சட்டத்தின் படி எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இந்த சட்டத்தின் படி எல்லையில், ஒருதலைப்பட்சமாக நடவடிக்கைகளை துவக்க சீன ராணுவத்திற்கு எந்த அதிகாரமும் வழங்கப்படக்கூடாது என்றும் வெளியுறவு அமைச்சகம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
லடாக் பிரிவில் உள்ள அசல் கட்டுப்பாட்டு எல்லையில், பதற்றம் நீடிக்கும் நிலையில், சீனா கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டத்தால் எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் இந்திய தரப்பில் இருந்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி,சீனாவின் நில எல்லை பகுதிகளில் குடியேற்றங்களை அமைத்து, அவற்றை முன்கள பாதுகாப்பு வளையமாக மாற்றவும், புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், எல்லையில் புதிதாக நகரங்களை உருவாக்கவும் சீன ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.