பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் புகாரில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன் வாயிலாக அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை அடுத்து, நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நடத்திய விசாரணையில், பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல அனைத்து குடிமக்களின் தனிநபர் ரகசியத்தை காப்பதும் அவசியம் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தனிநபர் உரிமைகளும் முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இவ்விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளின் விவரங்களை தெரிவிக்க போதுமான வாய்ப்பை வழங்கியதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அரசின் தெளிவற்ற மறுப்பு நீதிமன்றத்திற்கு போதுமானதாக இல்லை என்றார்.பெகாசஸ் விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த நீதிபதி, தேசியப் பாதுகாப்பு என்று கூறிவிட்டால் மட்டும் நீதித்துறை அந்த விவகாரத்தில் இருந்து விலகிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கும் என்றும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் குழு செயல்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.