கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை 11 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் நிரம்பியுள்ளது.
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணம் வட்டம் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை கர்நாடகக் காவிரிப் பாசன விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்குகிறது.
இந்த அணைக்குத் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தான் நீர்வரத்து அதிகமிருக்கும் என்பதால் அப்போதுதான் முழுக் கொள்ளளவை எட்டும். இந்த ஆண்டில் இதுவரை நிரம்பாமல் இருந்தது.
இந்நிலையில் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருவாரங்களாக மழைபெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இன்று காலையில் முழுக் கொள்ளளவான 124 அடியை எட்டியது. அதனால் அணைக்கு வரும் 19 ஆயிரத்து 341 கனஅடி நீரும் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.