கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசுக் கடை தீ விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சங்கராபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் செல்வம் என்பவர் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடை அமைத்திருந்தார். இந்த பட்டாசுக் கடையில் நேற்று இரவு 7 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் 5 பேர் பலியான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
பட்டாசுக் கடையை ஒட்டியவாறு ஐயங்கார் பேக்கரி என்ற பெயரில் இனிப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. பட்டாசுக் கடைக்கும் பேக்கரிக்கும் இடையில் ஒரு சுவர் மட்டுமே உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்த வெப்பத்தின் காரணமாகவோ அல்லது தீப்பொறி பட்டோ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் விடிய விடியப் போராடி தீயை அணைத்தனர். பின்னர் இடிபாடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பட்டாசுக் கடை தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்குத் தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.