தடுப்பூசி திட்டம் துவங்கி ஒன்பதே மாதங்கள் ஆன நிலையில் 100 கோடி டோஸ்களுக்கு மேல் தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது. டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் நூறாவது கோடி டோசை தாண்டும் மகா நிகழ்வை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, ஜனவரி 16ந் தேதி தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 27 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியன்று மட்டும் ஒரே நாளில் சாதனை அளவாக 2 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
தடுப்பூசித் திட்டம் துவங்கி 275 நாட்கள் கடந்துள்ள நிலையில், 100 கோடி டோஸ் என்ற சாதனை இலக்கை இந்தியா இன்று கடந்துள்ளது. நூறு கோடி டோசுகள் என்ற சாதனை எட்டப்பட்டதை முன்னிட்டு விரிவான கொண்டாட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பேருந்துகள், ரயில்கள், விமானங்கள், கப்பல்கள், மருத்துவமனைகளில் ஒலிபெருக்கிகள் மூலம் அது குறித்த அறிவிப்புகளை வெளியிடதிட்டமிடப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியில் ஈடுபட்டவர்களைப் பாராட்டும் விதமாக நாடு முழுவதும் பிரம்மாண்டமான பேனர்களும் சுவரொட்டிகளும் வைக்கப்பட உள்ளன. முக்கிய இடங்கள், தேசிய நினைவுச் சின்னங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடி இன்று பறக்கவிடப்படுகிறது.
இதனிடையே இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாவது ஊசி செலுத்தத் தவறியவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும்படி சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.