கொரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கப்பட்ட ஒன்பதே மாதங்களில், 100 கோடி என்ற இலக்கை இன்று இந்தியா எட்டுகிறது. இதையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று நூறாவது கோடி தடுப்பூசியை வெளியிடுகிறார்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, ஜனவரி 16ந் தேதி தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 27 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகிறது.
மோடி பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஒரே நாளில் சாதனை அளவாக 2 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 275 நாட்கள் கடந்துள்ள நிலையில், 100 கோடி டோஸ் என்ற சாதனை இலக்கை இந்தியா இன்று அடைய உள்ளது.
டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், 100 கோடி இலக்கைத் தொடும் தடுப்பூசியை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
இதனிடையே இந்தியாவின் நூறு கோடி இலக்கு பூர்த்தியானதும் விரிவான கொண்டாட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடி இன்று பறக்கவிடப்படுகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கைலாஷ் கெர் பாடிய ஒலி-ஒளி பாடல் ஒன்றா செங்கோட்டையில் வெளியிடுகிறார்.
பேருந்துகள், ரயில்கள், விமானங்கள், கப்பல்கள், மருத்துவமனைகளில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புகளை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியில் ஈடுபட்டவர்களைப் பாராட்டும் விதமாக பிரம்மாண்டமான பேனர்களும் சுவரொட்டிகளும் வைக்கப்பட உள்ளன.
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாவது ஊசி செலுத்தத் தவறியவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும்படி மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.