அமெரிக்காவில் முதல் முறையாக பன்றியின் சிறுநீரகம் மனிதனுக்கு பொருத்தப்பட்டு அதன் செயல்பாடு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
விலங்குகளின் உடல் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்த நெடுங்காலமாக சோதனைகள் நடைபெற்று வருகின்றன. நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு (NYU) மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் வசதி நிறுத்தப்பட உள்ளதால், மரபணு மாற்றம் செய்யப்பட பன்றியிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகம், உறவினர்கள் அனுமதியுடன் அப்பெண்ணுக்கு பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடலில் புதிதாக பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் நன்றாக செயல்பட்டு சரியான அளவு சிறுநீரை வெளியேற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் 90,000 க்கும் மேற்பட்டோர் மாற்று சிறுநீரகத்துக்காக மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை காத்திருக்கின்றனர்.
தற்போது இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றதால் சிறுநீரக பற்றாக்குறையை போக்கிட முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.