வரியா அப்டீன்னா ? ஹீரோக்களின் ஜீரோ கணக்கு…! சூடுபட்ட சூர்யா
Published : Aug 17, 2021 7:47 PM
வரியா அப்டீன்னா ? ஹீரோக்களின் ஜீரோ கணக்கு…! சூடுபட்ட சூர்யா
Aug 17, 2021 7:47 PM
வருமானவரி பாக்கித்தொகைக்கு வட்டி செலுத்த உத்தரவிட்டதை ரத்து செய்யக்கோரி நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சினிமாவில் ஒரு ரூபாய்க்கு விமான டிக்கட் விற்பதாக சூளுரைத்து சூரரை போற்றவைத்த சூர்யா தான் நிஜத்தில் வருமானவரி பாக்கிக்கு வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
நடிகர் சூர்யா கட்ட வேண்டிய வருமானவரிக்கு 1 சதவீதம் வட்டிபோட்டு வசூலிக்க வருமானவரித்துறை முயற்சித்த நிலையில், அந்த வட்டியில் இருந்து விலக்கு கேட்டு அவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தனது வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையின் போது 2007-2008, 2008-2009 ம் ஆகிய ஆண்டுகளுக்கான வருமானவரியாக 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று மதிப்பீடு செய்து 2011 ம் ஆண்டு வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்ததாகவும், அதற்கு மாதம் 1 சதவீதம் வட்டி வீதம் செலுத்த ஆணையிட்டுள்ளதாகவும், 3 ஆண்டுகள் தாமதமாக முடிவு செய்ததால், வருமான வரி மீதான வட்டி வசூலிப்பதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் வைத்திருந்தார்.
வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராததால் இந்த கால தாமதம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய வருமானவரித்துறை, அவருக்கு வருமானவரியின் வட்டியில் விலக்கு பெற உரிமையில்லை என்ற வாதத்தை முன்வைத்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வருமான வரித்துறை தரப்பு வாதத்தை ஏற்று, வருமானவரி மீதான வட்டி வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு கேட்ட சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால் வருமானவரித்துறை கணக்கிட்டு தெரிவித்த மறுமதிப்பீட்டு தொகையை கட்டாமல் 10 வருடங்களாக இழுத்தடித்த சூர்யாவிடம் இருந்து, அந்த 3 வருடங்களுக்கு மாதம் 3 லட்சத்து 11 ஆயிரத்து 960 வீதம் வட்டி கணக்கிடப்பட்டு மொத்தமாக சுமார் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நடிகர் சூர்யா தரப்பில், தாங்கள் வருமானவரியை வட்டியுடன் செலுத்தி விட்டதாகவும், வட்டிக்கு வட்டி விதிக்கப்பட்டதில் இருந்து மட்டுமே விலக்கு கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.