இல்லாத ராணுவம்! இருப்பதாக காகித கணக்கு! தாலிபான்களிடம் ஆப்கன் வீழ்ந்த கதை..!
Published : Aug 17, 2021 6:37 PM
இல்லாத ராணுவம்! இருப்பதாக காகித கணக்கு! தாலிபான்களிடம் ஆப்கன் வீழ்ந்த கதை..!
Aug 17, 2021 6:37 PM
நவீன ஆயுதங்கள், 20 ஆண்டுகள் பயிற்சி என பில்லியன் கணக்கில் அமெரிக்கா டாலர்களை செலவிட்டும், ஆப்கன் படைகள் ஏன் வீழ்ந்தன, தாலிபான்களை எதிர்க்கும் திராணியில்லாமல் போனது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இல்லாத ராணுவ வீரர்களை இருப்பதாக கணக்கு காட்டி ஊழல், பல மாதங்களாக சம்பளம் கிடைக்காத வீரர்களுக்கு தாலிபான்கள் கொடுத்த பாக்கெட் மணி, மனதளவில் நம்பிக்கை இழந்த படைகள் என ஆப்கன் ராணுவம் சீட்டுக்கட்டு போல சரிந்து கோட்டை விட்ட கதையை விளக்கும் செய்தித் தொகுப்பு...
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாகணமாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை முழுமையாக வசப்படுத்திய தாலிபான்கள், பல பிரதேசங்களை யுத்தம் இன்றி வென்றதாக அறிவித்தனர். சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள், தளவாடங்களை வழங்கியிருந்தும், 20 ஆண்டுகள் பயிற்சி அளித்திருந்தும், தாலிபான்களை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கன் படைகள் வீழ்ந்தது ஏன் என்ற வினாக்கள் உலகம் முழுவதும் எழுந்துள்ளன.
2003ஆம் ஆண்டில் வெறும் 6 ஆயிரம் என்ற அளவில் இருந்த ஆப்கன் ராணுவத்தின் வலிமை, 2021 ஏப்ரல் கணக்குப்படி 1 லட்சத்து 82 ஆயிரமாக அதிகரித்திருந்தது. 200-க்கும் அதிகமான ராணுவ தளங்கள் மற்றும் ராணுவ நிலைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆப்கன் ராணுவ வீரர்கள், அமெரிக்க படைகளுடன் சேர்ந்து சண்டையிட்டு 20 ஆண்டுகள் போர்க்கள பயிற்சி பெற்றிருந்தன. ஆனால் அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தவுடன், ஆப்கன் படைகள் நெல்லிக்காய் மூட்டை போல சிதறத் தொடங்கிவிட்டதையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தோஹா பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, விடுவிக்கப்பட்ட 5 ஆயிரம் தாலிபான்களை தவிர்த்து, ஒட்டுமொத்த ஆப்கனையும் பிடிக்கும் தாக்குதலை நிகழ்த்தும் அளவுக்கு தாலிபான்கள் தங்களது எண்ணிக்கையை அண்மையில் அதிகரித்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஆப்கனை கைப்பற்றும் விஷயத்தில் தாலிபான்களுக்கு சாதகமாக அமைந்தது எது என்றகேள்வி எழுகிறது. காகிதத்தில் மட்டுமே கணக்கு காட்டப்பட்ட, உண்மையில் இல்லாத ராணுவ வீரர்கள்தான் அதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
அமெரிக்காவிடம் இருந்து நிதி பெறுவதற்காக இல்லாத ராணுவ வீரர்கள் இருப்பதாக பொய்க் கணக்கு காட்டியுள்ளனர். மேலும் அமெரிக்காவிடம் நிதி பெற்று, ராணுவ வீரர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெருந்தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளது.
3 லட்சம் ஆப்கன் வீரர்கள் இருப்பதாக ஆவணங்களில் சொல்லப்பட்டாலும், போலீஸ் படைகள் உட்பட 96 ஆயிரம் பேர் இருந்திருந்தாலே அதிகம் என்று கூறப்படுகிறது.
ஊழல் மலிந்த ஆப்கன் அரசாங்கத்தை பாதுகாப்பதில் வீரர்களுக்கு ஆர்வமில்லாமல் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தின் உதவியில்லாமல், தாலிபான்களை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஆப்கன் படைகள் இழந்துவிட்டிருந்தன. தாலிபான்கள் தாக்குதல் தொடுத்தவுடன் ஆப்கன் படைகள், தங்கள் வசமிருந்த பிரதேசங்களையும், நவீன ஆயுதங்களையும் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தளவாடங்களை வழங்குவதையும் வான்வழி ஆதரவையும் திடுதிப்பென அமெரிக்கா நிறுத்திக் கொண்டதாக சில ஆப்கன் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். இவை எல்லாவற்றையும் விட ராணுவத்தில் புரையோடிப் போன ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
ஆங்காங்கே தனித்துவிடப்பட்டிருந்த ராணுவ சாவடிகளில் நுழைந்த தாலிபான்கள், எதிர்த்து நின்றவர்களை கொன்றொழித்துள்ளனர். அதேசமயம் சரணடைந்தவர்கள் உயிருடன் பாதுகாப்பாக தப்பித்துச் செல்ல அனுமதித்துள்ளனர். பல மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படாமல் இருந்த வீரர்களுக்கு தாலிபான்கள் பாக்கெட் மணி கொடுத்தும், மாகாண அளவில் தலைமைப் பொறுப்புகளில் இருந்த தளபதிகளுடன் டீல் பேசியும் படிய வைத்துள்ளனர்.