கட்டுமான அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், போதிய காரணங்கள் இன்றி விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால தாமதம் கூடாது என மாநகராட்சி செயற்பொறியாளர் அறிவுறுத்தி உள்ளார். விண்ணப்பங்களை பெற்று அவை ஏற்கத்தக்கது என்றால் 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் கட்டுமான இடத்தில் ஆய்வு செய்து தனது அறிக்கையை 2 தினங்களில் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்த 2 முதல் 5 நாட்களில் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும். கூடுதல் ஆவணங்கள் தேவை என்றால் 2 நாட்களுக்குள் அதை விண்ணப்பதாரர்களுக்கு தெரிவித்து, விண்ணப்பதாரர்கள் அவற்றை ஆன்லைனில் 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் கட்டணங்கள் கணக்கிடப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட 15 தினங்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு ஆவணங்களை நேரில் பெற மண்டல அலுவலகங்களில் தனி கவுன்டர்கள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.