திமுக ஆட்சி சமூகநீதி வழங்கும் ஆட்சியாகவும், அனைத்துச் சமூகத்தினரும் திருப்தி அடையும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போடி, பழனி, மடத்துக்குளம் ஆகிய ஊர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான சட்ட விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்றார். ஆனால் திமுக ஆட்சி, சமூகநீதிக்காக வழங்கும் ஆட்சியாக நிச்சயம் இருக்கும் என்றார். அனைத்துச் சமூகத்தினரும் திருப்தி அடையும் வகையில் சட்டத்தை இயற்றப்படுமென அவர் உறுதி அளித்தார்.
தேர்தல் கருத்து கணிப்புகள் குறித்து பேசிய அவர், அது உண்மையோ… பொய்யோ… அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார். ஆற்றுகிற பணியிலிருந்து என்றைக்கும் பின் வாங்கப் போவதில்லை என்றும், அதில் ஏமாந்து விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பிரசாரத்திற்கு இடையே ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் சக்கரபாணிக்காக அவர், நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரசாரத்தில் அவர், போடி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் தொகுதி வேட்பாளர் சரவணகுமார், ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் மகாராஜன், கம்பம் தொகுதி வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.
இதே போல பழனி தொகுதி வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் , ஆத்தூர் வேட்பாளர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் வேட்பாளர் என் பாண்டி, நிலக்கோட்டை வேட்பாளர் முருகவேல் ராஜன், ஒட்டன்சத்திரம் வேட்பாளர் சக்கரபாணி ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.
மடத்துகுளம் வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலைப்பேட்டை வேட்பாளர்தென்னரசு , வால்பாறை வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோருக்காக பிரசாரம் செய்தார்.