மக்களை சோம்பேறியாக்கும் இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகத்தில் பிரியாணி, மது பாட்டில்களுக்காக வாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்கக் கோரிய பொதுநல வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் கட்சியினரின் தேர்தல் அறிக்கைகளில் இலவச திட்டங்களே பிரதான இடத்தை பிடிப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சியினரை ஏன் தடை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினர்.
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் கட்சியினர் வாக்குறுதிகள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சிகள் தங்களின் வாக்குறுகளை முறையாக நிறைவேற்றுகிறார்களா என்றும் வினவினர். கடந்த 4 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அரசியல் கட்சியினர் வழங்கிய எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற கேள்விக்கும் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இலவச திட்டங்களை நிறைவேற்ற கடன் பெறுவதால், மாநிலத்தின் நிதிச்சுமை கூடுகிறது என்றும், அந்த நிதிச்சுமையை சமாளிக்க மதுக்கடைகள் அதிகரிக்கப்படுவதாக காரணம் காட்டப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர். பிரியாணி, மதுபாட்டில்கள் மற்றும் பணத்துக்காக வாக்குகளை விற்பனை செய்துவிட்டு நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.