ரூ.9,300 கோடி அளவிற்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர்
Published : Mar 31, 2021 6:19 AM
நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் கலக்கும் கழிவு நீரை தூய்மைப்படுத்த மத்திய அரசிடம் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டிருந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திருச்சி மரக்கடை அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமரிடம் தான் கோரிக்கை வைத்ததாகக் கூறிய முதலமைச்சர், கோதாவரியில் இருந்து காவிரிக்கு தண்ணீர் வழங்குவதில் ஆட்சேபணை இல்லை என்று ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
9 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பயிர்க் காப்பீடுத் தொகை வழங்கி உள்ளதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார
நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது திமுக - காங்கிரஸ் தான் என்றும், ஏழரை விழுக்காடு உள்ஒதுக்கீட்டின் காரணமாக நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தாம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் ஒரு கோப்பு கூட நிறைவேற்றப்படாமல் இல்லை என்றும், ஒருநாள் கூட சட்டமன்றத்திற்கு போகாமல் இருந்தது இல்லை என்றும் தெரிவித்தார்.